Logo

என் கடன் பணி செய்து கிடப்பதே

நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி

[ பாரதிதாசன் பல்கலைக்கழகம் இணைவு பெற்றது ]

கபிலர் நகர், வெண்ணாற்றங்கரை, தஞ்சாவூர் 613003

Logo

நாட்டார் கண்ட கல்லூரிக் கனவு

திருவருள் துணை
திருவருட் கல்லூரி

அகர முதல எழுத்தெல்லா மாதி
பகவன் முதற்றே யுலகு.

கடவுளின் திருவருளால் மக்கட் பிறப்பெய்தினார் யாவரும் பிறப்பின் பயனை அடைதற்கு முயல வேண்டும். அன்பு, அருள், வாய்மை, ஒப்புரவு முதலிய குணங்களுடையோராய்ப் பிறர்க்குப் பயனுண்டாக வாழ்வோரே பிறப்பின் பயன் எய்துவோராவர். எல்லாவற்றிற்கும் கருவியாக இருப்பது கல்வி ஆகலின், மாந்தரனைவரும் ஒருதலையாகக் கல்வி கற்கவே வேண்டும். மிகப் பழைய காலந்தொட்டு இத்தேயம் கல்வியில் மேன்மையடைந்திருந்தது. கல்வியில் சிறந்த பெரியோர்கள் அளவிலர் இருந்து வந்தனர். முற்காலத்திருந்த ஆசிரியர்களும் மாணவர்களும் குணவொழுக்கங்களில் மிக மேம்பட்டு விளங்கினார்கள். இந்நாட்டில் இக்காலத்திலிருந்து வரும் கல்வி முறை பெரிதும் பிழைபாடுடையதென்று அறிஞர் பலராலும் ஒப்புக்கொள்ளப்படுகிறது. தமது தாய் மொழியைக் கைவிடுத்து வேற்று நாட்டு மொழியாற் கல்வி கற்று வரும் புதுமை இவ் இந்திய நாட்டில் மாத்திரமே காணப்படுகிறது. பல கலையுணர்வும் பெற்று அரிய செயல்கள் செய்தற்பொருட்டன்றோ கல்வி கற்பது? இப்பொழுதோ மாணவர்கள் வெறும் மொழிப் பயிற்சியின் பொருட்டே தமது கட்டிளமைப் பருவமெல்லாம் செலவிட்டுக் கலையுணர்வு பெறுதலின்றி உடலுரமும் குன்றுகின்றனர். மாணவர்களுக்கு இருக்கவேண்டிய நற்குண நல்லொழுக்கங்கள் அருகி வந்து கொண்டிருக்கின்றன. மதவுணர்வு சிறிதும் பெறுதலின்மையால் அவர்கட்குத் தெய்வ நம்பிக்கையும் குன்றிவிட்டது. ஆசிரிய, மாணவர்களின் சம்பந்தம் பெரும்பான்மை உருக்குலைந்து நிற்கிறது. இவ்வாறாக நிகழ்ந்துள்ள குறைபாடுகளுக்கு ஓர் எல்லையில்லை. இந்நிலைமையில் வறிதே காலந்தாழ்த்தாது நம் நாட்டுக் கல்வி முறையைத் திருத்துவது இந்திய நன்மக்கள் ஒவ்வொருவருக்கும் ஏற்பட்டுள்ள கடனாகும்.

இந்தியாவுள்ளும் தமிழ் நாடொழிந்த பிற இடங்களிலுள்ளவர்கள் தத்தம் மொழிச் சார்பாகப் பல்கலைகழகங்கள் ஏற்படுத்தி கொள்ளவேண்டுமென்றும், தம் தாய் மொழியாற் கல்வியை வளர்த்து நாட்டின் நலத்தைப் பாதுகாக்க வேண்டுமென்றும் ஊக்கத்துடன் உழைக்க முன் வந்திருக்கின்றனர். வட நாட்டிலே பழங்கால முறைப்படி கல்விகற்பித்து மாணவர்களை அறிவொழுக்கங்களிலும் மதப்பற்று முதலியவைகளிலும் மென்ன்மையுடையவர்களாக்கும் நோக்கத்துடன் “குருகுலம்” போன்ற பல கல்லூரிகள் நடைபெற்று வருகின்றன. நமது தமிழ் நாட்டிலோ அத்தகைய கல்லூரி ஒன்றும் இல்லாதிருப்பதேயன்றி அதனை நிறுவ வேண்டுமென்னும் முயற்சியும் இதுகாறும் தோன்றவில்லை. தமிழ் மொழியானது பழைய நாளில் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் சங்கங்களினாலே வளர்க்கப்பட்டு வந்தது. முனிவரும் மன்னரும் முதலாயினோரெல்லாம் தமிழ்ப் புலவர்களாக விளங்கினார்கள். முடியுடை வேந்தர்களும், சிற்றரசர்களும், வள்ளல்களும் தமிழ் மொழியைப் பொன்னேபோற் போற்றி ஆதரித்து வந்தனர். ஒரு காலத்தில் தமிழ்மொழி இமயமுதல் குமரிகாறும் தனிச்செங்கோல் நடாத்தி விளங்கிற்று.

அத்தகைய சீரும் சிறப்பும் வாய்ந்த அமிழ்தினும் இனிய நம் தமிழ் மொழியானது தற்காலத்தில் கற்பாரும் ஆதரிப்பாருமின்றி மெலிவுற்றுத் தன் தூய தன்மையையும் இழந்து வருகின்றது. தமிழ்மக்களும் தம் பண்டைப் பெருமையிற் சுருங்கி நிற்கின்றனர். எனினும், தமிழ்நாட்டிலுள்ள செல்வர்களுள்ளும் புலவர்களுள்ளும் பலருக்குத் தமிழ் மொழியை முன்போல் வளம்பெறச் செய்து நாட்டினை மேன்மை யுறுவிக்க வேண்டு மென்னும் விருப்பம் இல்லாமற் போகவில்லை. அப்படியிருந்தும் தமிழ் வளர்ச்சிக்காக ஒரு கல்லூரியேனும் இதுகாறும் நிறுவப்படாமைக்குக் காரணம் தமிழ்ப்பற்று மிக்குள்ள செல்வர்பாற் சென்று இதனை உருவாக்குதற்கான வழிவகைகளைக் கூறி இப்பொறுப்பை ஏற்றுக்கொண்டு நடாத்துதற்குப் புலவர் யாரும் முன்வராத குறையேயென நினைக்க வேண்டி இருக்கிறது. இப்பொழுது இந்நாட்டிலுள்ள செல்வர்களும், தமிழ்ப்பற்றுடையோரும் இச்சமயத்தை நழுவவிடாது தாராளமாக உதவிபுரிந்து தமிழையும், நாட்டினையும் பேணுதல் வாயிலாகத் தமது புகழை மெய்மையில் நிலை நாட்டுவார்கள் என்று துணிந்தே யான் இவ்வகையான முயற்சியை மேற்கொண்டிருக்கிறேன்.

என் கருத்து:

தமிழ்நாட்டின் பல்கலைக்கழகத்துக்கு அடிப்படையான கல்லூரி ஒன்று விரைவில் நிறுவப்படல் வேண்டுமென்பதும்

கல்லூரியின் நோக்கங்கள்:
  • தமிழிலுள்ள தொல்காப்பியம் முதலிய சீரிய இலக்கண நூல்களையும், திருக்குறள் முதலிய ஒப்புயர்வற்ற உறுதி நூல்களையும், சங்கத்துச் சான்றோரியற்றிய செழும்பொருட் செந்தமிழிலக்கியங்களையும், பெருங்காப்பியங்களையும், பத்திஞானம் கனிந்து பேரின்பப்பயன் அளிக்கவல்ல தேவாரம், திருவாசகம், திருவாய்மொழி முதலிய அருள் நூல்களையும், சமயச் சார்பான வேதாந்த, சித்தாந்த, சித்தயோக நூல்களையும் பிறவற்றையும் நன்கு கற்கும்படி ஏற்பாடு செய்தல்.
  • ஆங்கிலத்திலும் வடமொழி முதலியவற்றிலும் உள்ளனவும், தற்காலத்துக்கு ஏற்றனவுமாகிய பல்வகைக் கலைகளையும் மொழிபெயர்த்தும், தமிழிலே புதிய நூல்களை ஆக்கியும் வெளிப்படுத்தல்.
  • இன்றியமையாத பிறமொழிகளையும் ஏற்குமாறு கற்பித்தல்.
  • பல மதங்களின் உண்மையான கருத்துக்களையும் நடுவு நிலைமையோடுபோதித்துத் தெய்வபத்தியும், வாய்மை தூய்மை முதலிய நற்குணங்களும், மக்கள்யாவரிடத்தும் அன்பும் தேசாபிமானமும் உண்டாகுமாறு செய்தல்.
  • ஓரளவாவது தொழிற்பயிற்சி நடைபெறுவித்தல்.
  • அறிவு வளர்ச்சிக்கான நூல்நிலையம், ஆராய்ச்சி நிலையம் முதலிய அங்கங்களை அமைத்தல். என்பனவும்; பிறவும் ஆகல் வேண்டும் என்பதும் ஆம்.

இதனை நிறைவேற்றுவதற்குப் பன்னூறாயிரம் உரூபாய் வேண்டியதாயிருக்கும் என்பது யாவரும் அறியக் கூடியதே. தொடக்கத்தில் இத்துணைப் பெரிய காரியம் சாதித்தல் அருமை உடையது. எனினும், இவைகட்கு அடிப்படையான உண்மைகளை மேற்கொண்டுள்ள கல்லூரி ஒன்றினை விரைவில் நிறுவவேண்டுமென எண்ணியிருக்கிறேன். இதனை நிறைவேற்றுவதில் எனக்கு ஒரு சிறிதும் ஆற்றல் உண்டென்று நினைத்தவனல்லேன். எனினும், இந்நற்காரியத்திற்குத் தேசாபிமானப் பெருஞ் செல்வர்களின் பேரன்புடன் கூடிய பேருதவியும், எல்லாம் வல்ல முழுமுதற் கடவுளின் திருவருளும் முன்னின்று நிறைவேற்றும் என உறுதியாகத் துணிந்திருக்கின்றேன்.

திருவருள் துணை

இங்ஙனம்,
பொதுநல ஊழியன்,
மு. வேங்கடசாமி

குறிப்பு:

இதற்குப் பொருள் வருவாய்களை உண்டாக்கவும் பொருளைப் பாதுகாக்கவும் வேண்டிய ஆலோசனை கூறுதற்கும், இது நடைபெறுதல் குறித்து இதன் நோக்கங்களுக்கு உட்பட்ட மற்றுமுள்ள ஆலோசனை கூறுதற்கும், இதன் நடைபேற்று விவரங்களை அவ்வப்பொழுது உலகிற்கு வெளிப்படுத்துதற்கும் ஓர் அறிவிப்புக் கழகம் ஏற்படுத்தலாகும். அக்கழகத்தினர்களின் பெயர் பின்பு வெளிப்படுத்தப் பெறும்.