என் கடன் பணி செய்து கிடப்பதே
நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி
[ பாரதிதாசன் பல்கலைக்கழகம் இணைவு பெற்றது ]
கபிலர் நகர், வெண்ணாற்றங்கரை, தஞ்சாவூர் 613003
என் கடன் பணி செய்து கிடப்பதே
நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி
[ பாரதிதாசன் பல்கலைக்கழகம் இணைவு பெற்றது ]
கபிலர் நகர், வெண்ணாற்றங்கரை, தஞ்சாவூர் 613003
நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் அவர்கள் 12.4.1884 இல் தஞ்சை மாவட்டத்தில், நடுக்காவிரி என்னும் சிற்றூரில் பிறந்தவர், தம் வாழ்நாளில் மிகச்சிறந்த தமிழ்ப் பேராசிரியராக விளங்கியவர்,கல்லூரிகளில் சேர்ந்து பயிலாமல் தாமே பயின்ற தமிழ்ப் பேராசான். அந்தப் பெருந்தமிழ்ச் சான்றோர் தஞ்சை மாவட்டத்தில் கல்லூரிகள் இல்லாத குறையை உணர்ந்து, தம்முடைய முப்பத்தேழாம் அகவையில் கி.பி. 1921ஆம் ஆண்டில், தஞ்சை மாவட்டத்தில் திருக்காட்டுப்பள்ளிக்கு அருகே திருவருள் கல்லூரி என்னும் பெயரில் கல்லூரி ஒன்று நிறுவக் கருதி, அதற்குரிய முயற்சிகளை மேற்கொண்டார்கள்.
பகுத்தறிவுப் பகலவனாக விளங்கியவரும், தமிழ்நாட்டில் தன்மானப் பேரியக்கத்தைத் தோற்றுவித்த தனிப்பெரும் தலைவருமான தந்தை பெரியார் அவர்கள் திருவருள் கல்லூரி நிறுவ உருபா ஐம்பது நன்கொடை தந்துள்ளார்கள் என்பது வரலாற்றில் குறிப்பிடத்தக்க செய்தியாகும். ஆயினும், அப்போது கி.பி. 1921 ஆம் ஆண்டில் திருவருள் கல்லூரி நிறுவும் முயற்சி வெற்றிபெறவில்லை. பின்னர்க் கி.பி.1984இல் தஞ்சையில் நாட்டாரையா நூற்றாண்டு விழா நடைபெற்ற போதும் திருவருள் கல்லூரி நிறுவும் முயற்சி மேற்கொள்ளப்பெற்றது. அந்த இரண்டாம் முயற்சியும் வெற்றிபெறவில்லை.
இப்போது நாட்டாரையா அவர்கள் நிறுவ விரும்பிய திருவருள் கல்லூரி என்னும் பெயருடன், நாட்டாரையா அவர்கள் பெயரும் நின்று நிலவ வேண்டும் என்னும் விருப்பத்துடன் 'நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி' என்னும் பெயரில் புலவர் கல்லூரி நிறுவப்பெற்றுள்ளது. 14.10.1992 இல் இக்கல்லூரி தொடங்கப்பெற்றது.
தமிழ் நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் 1975-76 ஆம் ஆண்டுகளில் புலவர் பட்டயப்படிப்புக்கு மாற்றாகப் பி.லிட் என்னும் பட்டப் படிப்புக் கொண்டு வரப்பெற்றது. அதனால், புலவர் கல்லூரிகள் கலைக் கல்லூரிகளாக வளர்ந்தன. ஆசிரியர்களும் கலைக் கல்லூரி ஆசிரியர்களுக்கு நிகராக ஊதியம் பெற்றனர்; மாணாக்கர்களும் பெரும்பயன் பெற்றனர். ஆனாலும், தமிழின் தனித்தன்மை குன்றிவிட்டது. மாணாக்கரின் தமிழ்ப் புலமை மிகவும் குறைந்து விட்டது என்னும் வருந்தத் தக்க புதிய நிலை தோன்றியுள்ளது. இவற்றையெல்லாம் எண்ணிப் பார்த்து, மீண்டும் தமிழில் புலவர் பட்டயப் படிப்பைக் கொண்டு வருவதற்கு நாங்கள் விரும்பினோம். இதற்குப் பாரதிதாசன் பல்கலைக்கழகம் இசைவு வழங்கியுள்ளது.
புலவர் வகுப்பு 1992 ஆம் ஆண்டு முதல், தஞ்சாவூர் நகரில், அருளானந்தம்மாள் நகரில் வாடகைக் கட்டிடத்தில் தொடங்கப்பட்டது. கல்லூரியின் முதல் முதல்வராக, பூண்டி கல்லூரியின் ஓய்வுப் பெற்ற பேராசிரியர் முனைவர் க.இராமையன் அவர்கள் செயல்பட்டார்கள். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற பேராசிரியர் முனைவர் இரா.சின்னதம்பி, பூண்டி கல்லூரியின் ஓய்வுப்பெற்ற பேராசிரியர் முனைவர் அ.தெட்சிணாமூர்த்தி, பூண்டி கல்லூரி பேராசிரியர் முனைவர் பெ.சுப்பிரமணியன் ஆகியோர் மதிப்பியல் பேராசிரியர்களாக ஊதியம் எதுவும் பெறமால் மாணவர்களுக்குத் தமிழ்மொழியைப் பயிற்றுவித்தனர்.